கற்கை நன்றே! கற்கை நன்றே! பிச்சை புகினும் கற்கை நன்றே!!
Showing posts with label பசும்பொன். Show all posts
Showing posts with label பசும்பொன். Show all posts

Monday, 15 March 2010

போற்றிப்பாடடி பொண்ணே..

````````````````````````````````````````````````````````



"வானம் தொட்டு போன மானமுள்ள சாமி...
தேம்புதய்யா இங்கே தேவர்களின் பூமி

பட்டத்துக்கு வேறு சிற்றரசன் யாரு
தங்கத்துக்கு வேறு மாற்று உண்டா கூறு

திருந்தாம போச்சே ஊரு சனந்தா...ன்
தத்தளித்து நிக்குதய்யா தேவர் இனந்தா..ன்

போற்றிப்பாடடி பொண்ணே....
தேவர் காலடி மண்ணே.."

.
.

Monday, 8 March 2010

தேவர் போற்றி (நெல்லை கண்ணன்)

தேவரெனும்பெரு மனிதர் இந்த நாட்டின்
தேசீயம் தெய்வீகம் இரண்டும் காக்க
காவலெனக் கடவுளரே அனுப்பி வைத்த
கண்ணியத்தின் பேரூருவம் - ஏழைகளை
வாழ வைத்த வள்ளலவர் - முருகன் தன்னை
வழி பட்டுப் புகழேற்ற ஞானச் செம்மல்
வாழையடி வாழையென அவரைப் போற்றி
வணங்கி நிற்றல் தமிழருக்குப் பெருமையாகும்


மண வாழ்க்கை ஏற்றாரா இல்லை இல்லை
மக்களுக்காய் நாட்டிற்காய் வாழ்ந்து நின்றார்
பிணம் கூட உயிர் கொண்டு எழுந்து நிற்கும்
பேச்சாற்றல் பேராற்றல் அவரின் ஆற்றல்
கணம் கூட தனைப் பற்றிச் சிந்திக்காமல்
கர்ஜனைகள் புரிந்து நின்றார் நாட்டிற்காக
நிணம் தசை நார் எலும்பெல்லாம் தேவர் பிரான்
நினைவாக போற்றி நின்று என்றும் வெல்வோம்


உண்மையதே சொத்தாகக் கொண்டிருந்தார்
உயர் குணங்கள் கொண்டிருந்தார் - அச்சமெனும்
புன்மையது அவரிடத்தில் என்றும் இல்லை
புனிதர் எங்கள் தேவர் மகன் நேர்மை எல்லை
கண்ணினிய தமிழினத்தின் உண்மை நெறி
கருத்தாக்கி மேடையிலே பொழிந்த மேகம்
எண்ணி நிற்போம் பசும்பொன்னாம் தேவர் தம்மை
என்றென்றும் தமிழினத்தார் வெற்றி கொள்ள


வேட்பு மனுத் தாக்கல் உடன் முடிந்து விடும்
வெற்றியெனும் செய்தி அன்றே உறுதி படும்
போர்ப் பரணி தேவர் பிரான் போட்டியிட்டால்
போட்டியிடும் தொகுதி யெல்லாம் அவர்க்கே சொந்தம்
காப்பு என்றும் தேவர் பிரான் தமிழருக்கு
கண்ணியமாய் வாழ்ந்திருந்த இனியருக்கு
ஆர்ப்பரித்துத் தேவர் பிரான் போற்றி நிற்போம்
அவர் வழியில் தேசத்தைக் காத்து நிற்போம்


தேவர் இல்லா நாட்டில் இன்று எவரெவரோ
தெய்வம் இல்லை என்று சொல்லி ஆடுகின்றார்
காவலுக்குத் தேவர் பிரான் இல்லையென்று
கண் கலங்கி நிற்கின்றார் நல்லோரெல்லாம்
சேவற் கொடி வேலவனைத் தொழுது நின்ற
செந்தமிழின் தேவர் பிரான் தனை வணங்கி
ஆவலுடன் தேசீயம் தெய்வீகத்தை
அனைவருமே காத்து நிற்போம் தேவர் போற்றி


```````````````````````````````````````````````````
***************************************************
```````````````````````````````````````````````````

விடுதலைக்காய் கூட்டங்கள் நடத்தும் போது
விருதுநகர் வீதியெல்லாம் தமுக்கடித்து
அடுக்கடுக்காய் மக்களையே சேர்க்கும் வண்ணம்
அறிவிப்புச் செய்து நின்ற காமராஜை
தடுத்தவரைத் தாக்கி அங்கே கொடுமை செய்தார்
தனம் நிறைந்த நீதிக் கட்சி பணம் படைத்தோர்
அடுத்த நாளே தேவர் மகன் அங்கே சென்றார்
அடித்தவர்கள் ஒரு நாளில் வருத்தம் தன்னை


வெளிப்படையாய்க் கேட்கவில்லை என்று சொன்னால்
விருதுநகர் இருக்காது என உரைத்தார்
அடித்ததிலே பெருமை கொண்டோர் மனம் திருந்தி
அன்றைக்கே மன்னிப்பைக் கேட்டு நின்றார்
கொடுப்பதிலே பெருமை கொண்ட தேவர் மகன்
கொள்கைக்காய் நிற்கின்ற எங்கள் தொண்டர்
வடுவில்லா காமராஜர் தன் வழியில்
வராதீர் வந்தால் நான் வருவேன் என்றார்


தமிழ்க்கடல்
நெல்லைக்கண்ணன்
69.அம்மன் சந்நிதித் தெரு
திருநெல்வேலி நகரம்
627 00௬

நெல்லை கண்ணன் தளத்தைப் பார்வையிட..
.

Wednesday, 24 February 2010

முதுகுளத்தூர் - 2

முதுகுளத்தூர் - 1 (முதுகுளத்தூர் கலவரம்)

மதுரை
சிறையில் அடைக்கப்பட்ட தேவர் மீது சுமத்தப்பட்ட குற்றச் சாட்டுக்கள் பின்வருமாறு : -

. முத்துராமலிங்கத் தேவர் எம்.பி. கடந்த பல வருடங்களாக ஆட்சேபகரமான பிரசங்கங்கள் மூலமும் வகுப்பு உணர்ச்சியை கிளறி வருவதோடு, மக்களைப் பலாத்கார சம்பவங்களுக்குத் துண்டி விட்டு வந்திருக்கிறார். கீழே கண்ட சம்பவங்கள் அதற்கான ஆதாரங்களாகும்

1. 12-5-1956-ல் மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில், ஸ்ரீதேவர் பேசிய போது, இன்னும் ஆறு மாதங்களுக்குள் இந்தியா, பிரிட்டன் காமன் வெல்த் உறவிலிருந்து விலகிவிட வேண்டும். தவறினால் காங்கிரஸ் கட்சியை இந்தியாவின் ஆட்சி பீடத்திலிருந்து வெளியேற்ற அகில இந்திய ரீதியில் ஒரு போராட்டம் ஆரம்பிக்கப்படும் என்று பார்வர்ட் பிளாக் சார்பில் இந்தியப் பிரதமருக்கு அறிவிப்பாகக் குறிப்பிட்டார். பார்வர்ட் பிளாக் கட்சிக்கு அவர் ஸ்தல தலைவர்.

2. 17-4-1957-ல்அவர் சாயல்குடியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய போது, நெறிதவறிய வியாபாரத்தின் மூலம் நாடார்கள் பெரும் பணக்காரர்கள் ஆகிவிட்டார்கள். பொது மக்கள் யாரும் நாடார்களோடு எவ்வித வர்த்தக தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம். அவர்களது கடைகளில் சாமான்கள் வாங்குவதையும் நிறுத்தி விடுங்கள். கடந்த ஜூலை மாதக் கடைசியில் விருதுநகரில் ஒரு சதி உருவாகி இருக்கிறது. நாடார் இனத் தலைவர்கள் இரகசியமாகத் கூடி, அக் கூட்டத்தில் அரிஜனங்களின் ஒரு பகுதியினனைரைக் கூட்டிப் போய் அவர்களை மறவர்களோடு மோதும்படி போதித்திருக்கிறார்கள் என்று குறிப்பிட்டார்.

3. 1957 ஆம் ஆண் ஜூன் 14-ல் அபிராமம் பொதுக்கூட்டத்தில் பேசுகையில், தவறான முறைகள் மூலம் எனக்கு எதிராகப் போலிஸ் எதுவும் செய்தால், போலிசார் செய்யும் முறைகளின் படியே அவர்களுக்குப் பதில் அளிக்கப்படும் என்று போலிஸ் அதிகாரிகளை எச்சரித்தார்.

4. 1957 ஆம் ஆண்டு ஜூன்மாதம் 10ஆம் தேதி திருப்புவனம் புதூரில் நடந்த ஒரு பொக்கூட்டத்தில் பேசும் போது, எனது தொகுதியில் எனக்குச் செல்வாக்கு இல்லை என்று காட்டுவாற்காகக் காங்கிரஸ்காரர்கள் பொறுக்க முடியாத பல அக்கிரம வழிகளைக் கையாளுகிறார்கள். அந்த அக்கிரமங்கள் அளவுக்கு மீறி வருமானால், காஷ்மீருக்குப் பதிலாக முதுகுளத்தூரிலே ஒரு மூன்றாவது உலகப்போரைத் தொடங்க நான் தயாராக நேரும் என்று பயமுறுத்திப் பேசினார்.

சமீபத்தில் முதுகுளத்தூர் தாலுகாவில் ஹரிஜனங்களுக்கும் மறவர்களுக்குமிடையே வளர்ந்தோங்கி வரும் வகுப்பு வளர்ச்சிக்கு அவரின் நடவடிக்கைகளே பொறுப்புகள் என்பதற்கான ஆதாரங்கள் பின்வருமாறு:-

1. 1957 செப்டம்பர் 10-ல் இராமநாதபுரம் கலெக்டரால் முதுகுளத்தூரில் ஒரு சமாதான மாநாடு கூட்டப்பட்டது. அக்கூட்டத்தில் அரிஜனங்கள் சார்பில் ஸ்ரீ இமானுவேல் பேசினார். தமக்குச் சமமாக இமானுவேல் என்பவர், அரிஜனங்களுக்காகப் பேசுவது கேவலம் என்ற முறையில் குறிப்பிட்ட தேவர், மாநாடு முடிந்து வெளியே வந்து, " இமானுவேலை இவ்வளவு முக்கியத்துவம் பெற எப்படி அனுமதித்தீர்கள்? " என்றும் எனக்கு ஏற்பட்ட இந்த அவமானத்திற்கு என்ன செய்யப் போகிறீர்கள்? என்றும் தம்மைப் பின்பற்றுவோரைப் பார்த்துக் கேட்டார்.

மறுநாள், அவரைப் பின்பற்றும் ஒரு பகுதி தேவர்களால் திரு இமானுவேல் கொலை செய்யப்பட்டு விட்டார். கொலை செய்தவர்களில் ஒருவர், கொலை செய்யும்போது, தேவரை எப்படி எதிர்த்துப் பேசலாம்? என்று கேட்டுக் கொண்டே கொன்றார்.

2. செப்டம்பர் 16-, வடக்கம்பட்டியில், ஒரு பொதுக்கூட்டம் நடந்தது. அதில் பேசிய திரு. தேவர், முதுகுளத்தூர், பரமக்குடி பகுதிகளில் வகுப்புக்கலவரம் மூளுவதற்கான உணர்ச்சிகள் வேகப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டதோடு, காங்கிரஸ்காரர்கள் சண்டையிடுவதற்குத் தவறான இடத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்றும், அப்பகுதி மக்கள் மாவீரம் கொண்டவர்கள். பிரிட்டன் ஆட்சியின் ஆரம்ப காலத்திலேயே, அவ்வாட்சியின் துப்பாக்கிக் குண்டுகளுக்குப் பயப்படாமல் எதிர்த்து நின்றவர்களென்றும், அப்பகுதி மக்கள் போலீசுக்கோ, விசேடப் போலீசுக்காங்கிரஸ்காரர்கள் , இராணுவத்திற்கோ பயப்படத் தேவையில்லை என்றும், நிலைமையை அடக்கப் பலாத்காரம் மூலமே சர்க்காருக்கு பதில் அளிக்கப்படும் என்றும், இந்த நாட்டில் தர்மத்தை நிலைநாட்டுவதற்காக, மக்கள் ஆயுதம் ஏந்தத் தயங்க வேண்டாமென்றும், உள்நாட்டுப் போரை நடத்தும்படியும் பேசினார்.

3. செப்டம்பர் 16-ல் வடக்கம்பட்டியில், கொலை ஆயுதப் போராட்டம், வேல் கம்பு தாக்குதல் போன்ற நடவடிக்கைகள் பெருத்த அளவில் நடைபெற்றன.

முதுகுளத்தூர், பரமக்குடி, கிவகங்கை, அருப்புக்கோட்டைத் தாலுகாவைச் சேர்ந்த கீழ்க்காணும் கிராமங்களில் நடந்த சம்பவங்கள் வருமாறு :-

1. செப்டம்பர் 17-ல் ஆயிரம் பேர் கொண்ட ஆயுதம் தாங்கிய மறவர் கூட்டம் ஒன்று, புத்தம்பல் கிராம அரிஜன வீடுகளுக்குத் தீயிட்டு விட்டு வீராம்பல் கிராமத்துக்கு அணி வகுத்துப் போய், அங்கே பாதுகாப்புக்காக இருந்த ஒரு எஸ்.. பி. போலிசைத் தாக்கியது. போலிசார் தற்காப்புத் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில் மறவர்கள் இருவருக்குக் காயம். சிலர் மடிந்தனர். 72 பேர் கைது செய்யப்பட்டு, ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.

2. செப்டம்பர் 18-ல் மாலை 4 மணி சுமாருக்கு, மறவர் கூட்டம் ஒன்று, தாத்தாக்குடி கிராமம் அரிஜனங்களின் வீடுகளுக்குத் தீயிட்டது.

3. செப்டம்பர் 19-ல் அருப்புக் கோட்டை தாலுhகா நரிக்குடி போலிஸ் சரகத்தை சேர்ந்த நாலுhர் கிராமத்தில் மறவர்கள், அஜனங்களின் வீடுகளுக்கத் தீ வைத்தனர்.

4. அன்று மாலை மார் 500 மறவர்கள் சிவகங்கைத் தாலுhகாவைச் சேர்ந்த திருப்பாச்சேத்தி அரிஜன வீடுகளுக்கத் தீயிட்டனர்.

5. அதே நாள் இரவு 10 மணி சுமாருக்கு, முன்னணிப் போலிசுப் படையினர், பெரும்பச்சேரி கிராம அரிஜன வீடுகள் எரிந்து கொண்டிருந்ததையும். 100 பேர் கொண்ட மறவர் கூட்டத்தால், அரிஜனங்கள் தாக்கப்படுவதையும் பார்த்து, தற்காப்புக்காக ஒன்பது ரவுண்டு சுட்டனர்.

6. அதே இரவு ஆயுதம் தாங்கிய மறவர் கூட்டம் ஒன்று, நரிக்குடி போலிஸ் சரகத்தைச் சேர்ந்த கிராமங்களில் தீயிடச் சென்ற செய்தி கிடைத்தது. கமுயீத போலிஸ் இன்ஸ்பெக்டர் உளுத்திமடை கிராமத்திற்குச் சென்று, ஆயுதஙகளைக் கீழே போடும்படி மறவர்களுக்குக் கட்டளையிட்டார். மறவர்கள் போலிசாரைத் தாக்கினர். போலிசார் கூட்டத்தில் நான்கு பேர் செத்தனர். பதினைது மறவர்கள் கைது செய்யப்பட்டு, ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

7. செப்டம்பர் 20-ல் காலை 6 மணிக்கு இளம்செம்பூரைச் சேர்ந்த கிட்டதட்ட 200 மறவர்கள் பயங்கர ஆயுதங்களுடனும், நாட்டுத் துப்பாக்கிகளுடனும் ஒரு மைல் தொலைவில் உள்ள வீராம்பல் கிராமத்திற்குச் சென்று, அரிஜனவீடுகளுக்குத் தீ வைத்து, அவர்களை வேட்டையாட ஆரம்பித்தனர். அரிஜனங்கள் அங்கு இருந்த மாதா கோவிலுக்குள் அடைக்கலம் புந்தனர். மறவர்கள் மாதா கோயில் ஜன்னல்களை உடைத்து, தீ வைத்து மூவரைக் கொன்று, முப்பத்தாறு பேர்களைக் காயப்படுத்தி விட்டனர்

8. அதே நாள் 500 பேர் கொண்ட மறவர் கூட்டம் ஒன்று, திருப்பாச்சேத்தி போலிஸ் சரகத்தைச் சேர்ந்த கிராமங்களுக்குச் சென்று, அரிஜனவீடுகளுக்குத் தீயிட்டு, உணவுப் பொருள்களையும், இதர பொருள்களையும் கொள்ளையிட்டனர். மானாமதுரை போலீஸ் இன்ஸ்பெக்டர் விசேஷப் போலீஸ் படையுடனும் சென்று, மறவர்களை மழவராயனேந்தலில் சந்தித்து, ஆயுதங்களைக் கீழே போடும்படி உத்தரவிட்டனர். கட்டுப்பட மறுத்த மறவர்கள் போலீசைத் தாக்க முனைந்தபோது, போலீசார் ஆறு ரவுண்டு சுட்டனர். அதன் பயனாய் ஒரு மறவர் சூடுபட்டு ஆஸ்பத்திரிக்குப் போகும் வழியில் இறந்து விட்டார்.

9. இம்மாதிரி குற்றச் செயல்களால், முதுகுளத்தூர் போலீசார் அடுத்துள்ள பல கிராமங்களைச் சேர்ந்த மறவர்கள் பலரைச் சந்தேகத்தின் பேரில் பல குற்றங்களுக்காகவும், சட்ட ஒழுங்கைக் காப்பதற்காகவும், கைது செய்தனர்.

இவைகளை அறிந்த திரு.தேவர், தமிழ்நாடு பத்திரிகை பிரதிநிதிகளிடம், தேவமார்களைக் கைது செய்து, குறிப்பாக எனது சொந்தக் கிராமமான பசும்பொன்னில் எனது சொந்த வீட்டிலிருந்த சமையல்காரனையும் உறவினர்களையும் கூடக் கைது செய்வதின் மூலம் சர்க்கார் என்னைச் சண்டைக்கு இழுக்கிறது' என்று கூறியிருக்கிறார். அவர் கூறியதில், அவர் சவாலை ஏற்கத் தயாராகும் எண்ணம் உள்ளடங்கி இருக்கிறது.

10. கீழ்த்தூவலில் நடந்த துப்பாக்கிப் பிரயோகம் சம்பந்தமாய் எஸ்.வெங்கடராமன் .சி.எஸ். விசாரணை நடத்தினார். இவ்விசாரணையைத் தாமோ, தமது கட்சியோ ஏற்கப் போவதில்லை என்று திரு தேவர் வாய்மொழியாகக் கூறியிருந்தும், விசாரணை நடந்த கட்டிடத்தின் வாயிலருகே ஒரு காரில் விசாரணையின்போது உட்கார்ந்திருந்தார். இதனால் அரிஜனங்கள் தைரியமாக கமிஷனிடம் வந்து தேவருக்கு எதிராகச் சாட்சியம் அளிக்க இயலாமல் போனது சாத்தியமாயிற்று. முதுகுளத்தூர் தாலுகாவிலும் அதை அடுத்த பகுதிகளிலும் உள்ள மறவர்கள் திரு தேவரின் சொல்லுக்குக் கட்டுப்பட்டவர்கள் என்பது கண்கூடு, மேலும் இவ்வித சம்பவங்களிலிருந்து, திரு தேவர் தமது ஜனங்களைப் பலாத்கார நடவடிக்கைகளிலிருந்து தடுப்பதற்குப் பதிலாக பின்னணியில் இருந்து கொண்டு அரிஜனங்களுக்கு எதிராக தூண்டிவிட்டார் என்பது தெரிகிறது.

. முத்துராமலிங்கத் தேவர் தமது பகிரங்கப் பேச்சுக்களின் மூலமும், தம்மைப் பின்பற்றுவோருடன் இரகசிய ஏற்பாடுகள் செய்வதன் மூலமும், வகுப்புணர்ச்சியைக் கிளறிவிட்டு வருகிறார் என்பது தெரிகிறது. இதை இப்படியே தொடரவிட்டால், மேலும் பல வகுப்புக் கலவரங்கள் சட்ட விரோத செயல்களுக்கும் அவர் தமது சுதந்திரத்தைப் பயன்படுத்தக்கூடும். அந்த நிலைமை ராஜ்யத்தின் பாதுகாப்பிற்கும், அமைதிக்கும் பாதகமாக முடியும் என்பதால், அவர் தடுப்புக் காவல் சட்டப்படி காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மேற்குறித்த குற்றச்சாட்டுக்களை மறுத்து, திரு தேவர் எழுத்து மூலம் விவரிக்க உரிமையுண்டு. அவ்வாறு அவர் இந்தக் குற்றச்சாட்டுக்களை மறுக்க அவர் விரும்பினால், அவர் காவலில் வைக்கப்பட்டுள்ள சென்னை சிறை சூப்பிரண்டட் மூலம் சென்னை சர்க்கார் காரியதரிசியிடம் அனுமதி கோரலாம். திரு. தேவர் மூலம் அனுப்பப்படும் எவ்வித பிரதிநிதித்துவத்தையும் சர்க்கார் உடனே அட்வைசரி போர்டு முன் வைக்கும். அட்வைசரி போர்டு முன் நேரடியாக வந்து விபரம் சொல்ல திரு. தேவர் விரும்பினால், அதன்படியும் செய்யலாம். தாம் அட்வைசரி போர்டு முன் ஆஜராகி, விளக்கமளிக்கத் தேவர் நிச்சயித்திருந்தால், அரசாங்கத்தின் தலைமைக் காரியதரிசிக்கு முன்கூட்டியே எழுதும்படி திரு தேவர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்.


முதுகுளத்தூர் - 3 (தேவரின் பதில்)
முதுகுளத்தூர் - 4 (தேவர் விடுதலை)


.

Thursday, 28 January 2010

தேவர் திருமகன் - வைகோ உரை



அவருடைய வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்தையும் எண்ணிப் பார்த்தால், பிறந்த ஆறு திங்களில் அன்னையை இழந்தார். ஒரு இஸ்லாமியத் தாயின் அரவணைப்பில் வளர்ந்தார். ஜாதி எல்லைகளைக் கடந்த தலைவர் அவர். ஆகவேதான் தேவர் திருமகனாரைப் பற்றி மாசி வீதியில் பேசவேண்டும் என்பது, ஏதோ வழக்கமாக அல்ல. என் கடமைகளில் ஒன்றாக, எனக்குக் கிடைத்த பேறாகக் கருதி இங்கே நான் பேசிக் கொண்டு இருக்கிறேன். இந்த இளைஞர் சமுதாயம் அவரைப் பற்றித் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காகப் பேசுகிறேன்.

அவருக்குப் பத்தொன்பது வயது ஆயிற்று. 1927 ஆம் ஆண்டு, சென்னையில் காங்கிரஸ் மாநாடு. அந்த மாநாட்டுக்குத் தலைமை ஏற்றவர் டாக்டர் அன்சாரி. தேவர் திருமகனார் அரசியலுக்கு உள்ளே அப்போது நுழையவில்லை. அவர் குடும்பம் பெரிய ஜமீன் குடும்பம். எண்ணற்ற கிராமங்கள் அவருடைய கட்டுப்பாட்டில் ஆளுகைக்கு உள்ளே இருந்தன. ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலபுலங்கள். ‘எனக்குப் பஞ்சுமெத்தை தெரியாது, பட்டுத் தலையணை தெரியாது, பாய்தான் தெரியும்என்று சொன்ன தேவர் திருமகன், ஒரு சீமான் வீட்டுப்பிள்ளை. செல்வச் செழிப்புள்ள குடும்பத்து வீட்டில் பிறந்த பிள்ளை. அப்படிப்பட்ட தேவர் திருமகனார், அவருடைய குடும்பத்தில் இருந்த பிணக்குகளால், சிவில் வழக்குகள் தந்தையாரோடு மனத்தாங்கல் ஏற்பட்டது.

சென்னையில் தேவர்

அப்படிப்பட்ட சூழலில், அந்த சிவில் வழக்குகளை நடத்துவதற்காகச் சென்னைக்குச் சென்றார். ‘அம்ஜத் பார்க்என்கிற பெயருள்ள மாளிகை. மயிலாப்பூரில், மூன்று ஏக்கர் சுற்றளவு உள்ள மாளிகை. அந்த மாளிகையின் சொந்தக்காரர் சீனிவாச அய்யங்கார். மிகப்பெரிய வழக்கறிஞர். அவரிடம் சென்றார் வாலிபராக இருந்த தேவர்.
ஐயா, இந்த வழக்குகளை நடத்த வேண்டும். அதற்காக வந்து இருக்கிறேன்என்றவுடன், பெரிய குடும்பத்துப் பிள்ளை அல்லவா? சீனிவாச அய்யங்கார் அவ்வளவு பெரிய மாளிகையில் அவரை வரவேற்று உபசரித்து, ‘நான்கு நாள்கள் காங்கிரஸ் மாநாடு இங்கே நடக்கிறது. அந்த வேலையில் இருக்கிறேன். நான்கு நாள் கழித்து, இந்த வழக்கு விசயங்களை, இந்த ஆவணங்களைப் பார்க்கிறேன்என்று சொல்கிறார்.

பிறகு சில நிமிடங்கள் கழித்து அவர் கேட்கிறார், ‘இந்த நான்கு நாள்களும் நீங்கள் இங்கேயே தங்க முடியுமா?’ என்று கேட்கிறார். எதற்காக ஐயா கேட்கிறீர்கள்? என்றார். அந்தக் காலகட்டத்தில் சென்னையில் பெரிய ஓட்டல்கள் கிடையாது. நட்சத்திர ஓட்டல்கள் கிடையாது. விருந்தினர் விடுதிகள் கிடையாது. தலைவர்களை முக்கியமான வீடுகளில்தான் தங்க வைப்பார்கள். நாட்டின் புகழ் வாய்ந்த தலைவர்கள் அவர் காந்தியாராகட்டும், நேருவாகட்டும், திலகராகட்டும் அந்தத் தலைவர்களை எல்லாம், வீடுகளில் தங்கவைப்பார்கள். அது வழக்கம்.

நான்கு நாட்கள் நான் சொல்கின்ற ஒரு சிறுபணியை, நீங்கள் செய்ய முடியுமா?’ என்று கேட்கிறார். தேவர் திருமகன் ஆங்கிலமும் நன்கு பேச வல்லவர், ‘சொல்லுங்கள் செய்கிறேன்என்கிறார்.

தேவர் வாழ்விலே திருப்பம்

ஒன்றுமில்லை; வட இந்தியாவில் இருந்து பெரிய தலைவர்கள் வந்து இருக்கிறார்கள். அவர்கள் வீடுகளில் தங்க வைக்கப்படுகிறார்கள். அப்படி ஒரு தலைவருடைய வீட்டில், அவரோடு இருந்து அவரை மாநாட்டுக்கு அழைத்து வரவும், திரும்ப அழைத்துச் செல்லவும், அவருடைய செளகரியங்கள் நன்றாக நடக்கிறதா என்பதை உடனிருந்து கண்காணித்து உதவிசெய்வதற்கும் உங்களால் இயலுமா?’ என்றார். ‘தாராளமாகச் செய்கிறேன், மகிழ்ச்சியாகச் செய்கிறேன்என்கிறார். தேவர் வாழ்விலே அதுதான் திருப்பம்.

இந்த விலாசத்தில் இருக்கின்ற வீட்டுக்குச் சென்று, அந்தத் தலைவரிடத்தில் இவரை அறிமுகப்படுத்தி வைத்து, ‘உங்களுக்கு உதவியாக இருப்பார் இந்த இளைஞர்என்று சொன்னார். அந்தத் தலைவர்தான் நேதாஜி. இப்படித்தான் உறவு மலர்ந்தது. சந்தர்ப்பங்கள் ஒரு மனிதரின் வாழ்க்கையில் எப்படிப்பட்ட திருப்பங்களை ஏற்படுத்துகின்றன பாருங்கள்!

நாட்டுக்கு அருட்கொடை அவர்கள் சந்திப்பு. இத்தென்னாட்டுக்கு அருட்கொடை அந்தச் சந்திப்பு.
வங்கத்துச் சிங்கம் நேதாஜி அவர்களுக்கு நான்கு நாட்களும் உறுதுணையாக தேவர் இருந்த அந்தச் சந்திப்புதான், வாழ்நாள் முழுமையும் பிரிக்க முடியாத பிணைப்பை ஏற்படுத்திக் கொடுத்தது. அப்படித்தான், அவர் பொது வாழ்வுக்கு வருகிறார்.

முதல் மேடை

1933 ஆம் ஆண்டு. விவேகானந்தர் முதலாவது ஆண்டுவிழா என்ற நிகழ்ச்சியில்தான் முதன்முதலாக மேடையில் முழங்குகிறார் தேவர் திருமகன். அந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தவர் பெயர் சேதுராமன் செட்டியார்.
இதை நான் குறிப்பிடக் காரணம், இதை மறக்காமல் இருந்து, பிறிதொரு கட்டத்தில் ஒரு தேர்தல் களத்துக்குப் போகிறபோது, ‘சகோதர சகோதரிகளேஎன்று சிகாகோவில் நடைபெற்ற அனைத்து உலக நாடுகளின் சமய மாநாட்டில் முழங்கி, உலக நாடுகளின் பார்வையைத் தன் பக்கம் திருப்பினாரே, பரஹம்சரின் தலைமை சீடர் விவேகானந்தர், அவரைப்பற்றிப் பேச தனக்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்த சேதுராமன் செட்டியாரை, ஒரு தேர்தல் களத்தில் தன் சமூகத்தைச் சேர்ந்த மறவர் குலத்தைச் சேர்ந்தவர் போட்டி இடவேண்டும் என்பதற்கான எல்லா வாய்ப்பும் இருந்தபோதும், அதைத் தவிர்த்துவிட்டு, சேதுராமன் செட்டியாரைத் தேர்தல் களத்தில் நிறுத்தி வெற்றி பெற வைத்த பெருமகன்தான் தேவர் திருமகன் என்பதை நான் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

களப்போர்

பசும்பொன் தேவர் திருமகனார், அப்போது இருந்த அடக்குமுறைச் சட்டங்களை எதிர்த்து அரசியல் களத்தில் போராடுகிறார். இங்கே குறிப்பிட்டார்களே, ஆங்கில ஆட்சியாளர்களால் மிகப்பெரிய அடக்கு முறைக்கு ஆளானது முக்குலத்தோர் சமுதாயம். விடுதலை வரலாற்றிலே பிரிட்டிக்ஷ் ஏகாதிபத்தியத்தின் அடக்குமுறைக்குப் பலியான சமுதாயம். ஒவ்வொரு விதமான அடக்குமுறை இருக்கும்,.............................

முழுஉரையையும் படிக்க இங்கே அழுத்தவும்
.
.

பசும்பொன் - ஜெயமோகன் கட்டுரை



ஒரு தொன்மம் அல்லது ஆசாரம் அல்லது திருவிழா எப்படி உருவாகி வலுப்பெறுகிறது என்பதற்கான சமீபகால உதாரணம் பசும்பொன் கிராமத்தில் ஒவ்வொரு வருடமும் நவம்பர் 30 அன்று நடைபெறும் தேவர் ஜெயந்தி விழா....எனத் தொடங்கும் கட்டுரையாளர் மதுரை மாநகருக்குள் தேவர் ஜெயந்தி விழாவைப் பற்றி கீழ் கண்டவாறு தொடருகிறார்

நகருக்குள் கோரிப்பாளையம் தேவர் சிலைநோக்கி நாலைந்து ஊர்வலங்களைப் பார்த்தோம். மஞ்சள்நீர் கொண்ட எவர்சில்வர் செம்புகளை தலையில் ஏந்திய பெண்கள் குலவையிட்டபடி சென்றார்கள். தேவர் சிலைக்கு மஞ்சள்நீர் அபிஷேகம் செய்வார்களாம். முளைப்பாரி ஏந்தியும் சென்றார்கள். எங்கும் தேவர் புகழ்பாடும் பாடல்கள். பெரும்பாலான பாடல்கள் தெம்மாங்குக்கு உரிய இரண்டே ராகங்களில் அமைந்தவை.


மேலே செல்ல செல்ல ஒன்றைக் கவனித்தேன். கிட்டத்தட்ட ஊரடங்கு போலவே இருந்தன சாலைகள். எந்தக்கடையும் திறக்கவில்லை. சாலையோரங்களில் மக்களே இல்லை. ஆங்காங்கே போலீஸ் குவியல்கள். கார்களிலும் வேன்களிலும் டெம்போ டிராவலர்களிலும் லாரிகளிலும் கூட்டம் கூட்டமாக இளைஞர்கள் சென்று கொண்டே இருந்தார்கள். ஒரு உக்கிரமான களியாட்ட மனநிலை. பெரும்பாலான வண்டிகளின் கூரைமேல்தான் அதிகம் பேர் இருந்தார்கள். தலையில் ஒரு மஞ்சள் ரிப்பன் கட்டியிருந்தார்கள். இரு கைகளையும் தூக்கி கத்தி ஆர்ப்பரித்தபடியே சென்றார்கள்.

அதிகமும் இளைஞர்கள். கிராமப்புறத்து இளைஞர்கள் என்பது பார்த்தாலே தெரியும்படி இருந்தது. சிறுவர்கள்கூட நிறையபேர் இருந்தார்கள். நிறையபேர் உள்ளூர் தேவர் சாதிப்பிரமுகர்கள் அளித்த முத்துராமலிங்கத்தேவர் படம் அச்சிடப்பட்ட பனியன்கள் அணிந்திருந்தார்கள். கிராமங்களைச் சேர்ந்த சிறு சிறு நண்பர் குழுக்களாக வந்திருந்தார்கள். ஆட்டம் பாட்டு நடனம் என்று கொண்டாடியபடிச் சென்றார்கள்.......

பின் பசும்பொன்னில் தொடருகிறார் கட்டுரையாளர் ..

கிராமியக்கலைநிகழ்ச்சிகளும் நடந்தன. ஆங்காங்கே குழந்தைகளுக்கு மொட்டைபோட்டுக்கொண்டிருந்தார்கள். பெரியவர்களும் பலர் மொட்டை போட்டுக்கொள்வதைப் பார்த்தேன். மொத்தக்கூட்டமும் பொதுவான முறைபப்டுத்தல்கள் இல்லாமல் தன்னிச்சையாக அங்காங்கே சிறு குழுக்களாகச் செயல்பட்டுக்கொண்டிருந்தார்கள்...

தேவர் சமாதி ஒரு கோயில் போல் இருக்கிறது. தேவர் துறவியாக இருந்தவராதலால் சைவ முறைப்படி சமாதியிடத்தில் ஆலயம்கட்டி வழிபட்டு வருகிறார்கள். நம்ப முடியாத அளவுக்கு கூட்டம். அலையலையாக . கைகூப்பியபடி கண்ணீர் கசிய பரவச நிலையில் வயதான பாட்டிகள் எல்லாம் வரிசையில் நின்றுகொண்டிருந்தார்கள். அந்த உணர்ச்சிவேகம் அங்கே எங்கும் நிறைந்திருந்தது. அந்த நீள்வரிசையை தாண்டி உள்ளே போக முடியும் என்றே படவில்லை....

கட்டுரையாளர் தேவரைப் பற்றி குறிப்பிடுகையில் தேவரின மக்கள் செய்யவேண்டியவன பற்றியும் கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறார்

எந்த ஒரு மக்கள்கூடுகையும் ஜனநாயகச் செயல்பாடுகளுக்குச் சாதகமானதே. தேவர்சாதியை அரசியல் பிரக்ஞைக்கு கொண்டுவந்தவர் என்ற முறையிலும் அவர்களின் ஒற்றுமைக்கும் உரிமைக்கும் சுயநலமில்லாது போராடியவர் என்ற முறையிலும் அம்மக்கள் முத்துராமலிங்கத்தேவர் மீது கொண்டிருக்கும் பெரும் பற்று மரியாதைக்குரியது

ஆனால் தேவர் அச்சாதிக்குள் தன்னை ஒடுக்கிக்கொண்ட ஒரு சாதித்தலைவராக இருக்கவில்லை. அவர் ஒரு தேசியத்தலைவர். ‘தேசியமும் தெய்வீகமும் என் இருகண்கள்என்று அறிவித்தவர். அந்தப்புரிதல் அங்கே வந்த மக்கள்திரளுக்கு இருக்கிறதா என்ற ஐயம் ஏற்பட்டது. அந்த திருவிழாவில் எங்குமே தேவர் அவர்களின் கருத்துக்களையும் அரசியல் பணியையும் வாழ்க்கை வரலாற்றையும் விளக்கும் ஒரு நிகழ்ச்சியோ , கண்காட்சியோ , ஏன் அறிவிப்புகளோகூட கண்ணில்படவில்லை. அவரைப்பற்றிய நூல்களோ அவர் ஆற்றிய உரைகளடங்கிய நூல்களோ விற்பனைக்கு வைத்திருக்கவில்லை. ஒரு தலைவரை அவரது கருத்துக்கள் வழியாக மக்கள் அறிவதே முறையானது. அதற்கான வசதிகள் அங்கே செய்யப்படவில்லை.

மதுரை ஆலயத்தில் தலித்துக்களை அழைத்துக்கொண்டு ஆலயப்பிரவேசம் செய்தவர் தேவர் என்பது வரலாறு. அந்த வரலாறு அந்த இளைஞர்களுக்குச் சொல்லிக்கொடுக்கப்பட்டிருக்கும் என்றால் அவர்களில் ஒருசிலர் கிளப்பிய சில வெறிகொண்ட வெறுப்புக்கோஷங்களை எழுப்பியிருக்கமாட்டார்கள்.

.சந்தானம், தி.செ.சௌ.ராஜன், சட்டநாதக் கரையாளர் போன்ற பலருடைய வாழ்க்கை வரலாறுகளில் தேவர் குறிப்பிடப்படுகிறார். உருக்கு போன்ற மன உறுதியும் கட்டுப்பாடும் கொண்ட மனிதராக அவரைச் சொல்கிறார்கள். அந்தக்கட்டுப்பாட்டை அவரது பிறந்தநாளில் கடைப்பிடித்தல்தான் அவருக்குப் பெருமை சேர்க்கும் என்று பட்டது. ஒரு தேசியத்தலைவரின் பிறந்தநாளன்று சாலைகள் தென்பட்ட பீதி ஒரு நல்ல விஷயம் அல்ல. தேவர் அவர் தேசத்துக்குச் செய்த தியாகங்களுக்காக அத்தனை சாதியினராலும் இந்தியாவில் உள்ள அத்தனை மக்களாலும் மதிப்புடனும், அவர் தங்களுக்கும் தலைவர் என்னும் பிரியத்துடனும் நினைவுகூரப்படுவதே அவருக்குச் செய்யும் நியாயம் ஆகும்.

தன்னிச்சையாக ஆரம்பித்த ஒரு விழா மெல்ல மெல்ல ஒரு திருவிழாவாக ஆகிவிட்டிருக்கிறது. உட்பிரிவுகள் ஊர்ப்பிரிவுகளை எல்லாம் மறந்து மக்கள் ஒருங்கிணைவது மிகச்சிறந்த ஒரு விஷயம்.சரியான வழிகாட்டல் இருந்தால் அம்மக்கள் தங்கள் ஜனநாயக உரிமைகளைப் பெறவும், கல்வி தொழில் போன்ற பல துறைகளில் ஒருங்கிணைந்து வெற்றி பெறவும் அந்த மனநிலை உதவக்கூடும். எந்த ஒரு மக்கள் எழுச்சியையும் சரியாக வழிநடத்தினால் ஆக்கபூர்வமான சக்தியாக ஆக்க முடியும். அதைச்செய்யும் தலைவர்கள் அவர்களில் இருந்து உருவாகி வரவேண்டும்

ஜெயமோகனின் முழு கட்டுரையையும் வாசிக்க இங்கே அழுத்தவும்

ஜெயமோகனின் கட்டுரை தொடர்பாக எழுந்த விவாதங்களை வாசிக்க இங்கே அழுத்தவும்

விவாதம்-2

விவாதம்-3 : தமிழக தேவரினம் -கேரள நாயரினம் ஒப்பீடும், தேவரின மக்களின் கடமையும்

.
.