கற்கை நன்றே! கற்கை நன்றே! பிச்சை புகினும் கற்கை நன்றே!!

Thursday 28 January, 2010

பசும்பொன் - ஜெயமோகன் கட்டுரை



ஒரு தொன்மம் அல்லது ஆசாரம் அல்லது திருவிழா எப்படி உருவாகி வலுப்பெறுகிறது என்பதற்கான சமீபகால உதாரணம் பசும்பொன் கிராமத்தில் ஒவ்வொரு வருடமும் நவம்பர் 30 அன்று நடைபெறும் தேவர் ஜெயந்தி விழா....எனத் தொடங்கும் கட்டுரையாளர் மதுரை மாநகருக்குள் தேவர் ஜெயந்தி விழாவைப் பற்றி கீழ் கண்டவாறு தொடருகிறார்

நகருக்குள் கோரிப்பாளையம் தேவர் சிலைநோக்கி நாலைந்து ஊர்வலங்களைப் பார்த்தோம். மஞ்சள்நீர் கொண்ட எவர்சில்வர் செம்புகளை தலையில் ஏந்திய பெண்கள் குலவையிட்டபடி சென்றார்கள். தேவர் சிலைக்கு மஞ்சள்நீர் அபிஷேகம் செய்வார்களாம். முளைப்பாரி ஏந்தியும் சென்றார்கள். எங்கும் தேவர் புகழ்பாடும் பாடல்கள். பெரும்பாலான பாடல்கள் தெம்மாங்குக்கு உரிய இரண்டே ராகங்களில் அமைந்தவை.


மேலே செல்ல செல்ல ஒன்றைக் கவனித்தேன். கிட்டத்தட்ட ஊரடங்கு போலவே இருந்தன சாலைகள். எந்தக்கடையும் திறக்கவில்லை. சாலையோரங்களில் மக்களே இல்லை. ஆங்காங்கே போலீஸ் குவியல்கள். கார்களிலும் வேன்களிலும் டெம்போ டிராவலர்களிலும் லாரிகளிலும் கூட்டம் கூட்டமாக இளைஞர்கள் சென்று கொண்டே இருந்தார்கள். ஒரு உக்கிரமான களியாட்ட மனநிலை. பெரும்பாலான வண்டிகளின் கூரைமேல்தான் அதிகம் பேர் இருந்தார்கள். தலையில் ஒரு மஞ்சள் ரிப்பன் கட்டியிருந்தார்கள். இரு கைகளையும் தூக்கி கத்தி ஆர்ப்பரித்தபடியே சென்றார்கள்.

அதிகமும் இளைஞர்கள். கிராமப்புறத்து இளைஞர்கள் என்பது பார்த்தாலே தெரியும்படி இருந்தது. சிறுவர்கள்கூட நிறையபேர் இருந்தார்கள். நிறையபேர் உள்ளூர் தேவர் சாதிப்பிரமுகர்கள் அளித்த முத்துராமலிங்கத்தேவர் படம் அச்சிடப்பட்ட பனியன்கள் அணிந்திருந்தார்கள். கிராமங்களைச் சேர்ந்த சிறு சிறு நண்பர் குழுக்களாக வந்திருந்தார்கள். ஆட்டம் பாட்டு நடனம் என்று கொண்டாடியபடிச் சென்றார்கள்.......

பின் பசும்பொன்னில் தொடருகிறார் கட்டுரையாளர் ..

கிராமியக்கலைநிகழ்ச்சிகளும் நடந்தன. ஆங்காங்கே குழந்தைகளுக்கு மொட்டைபோட்டுக்கொண்டிருந்தார்கள். பெரியவர்களும் பலர் மொட்டை போட்டுக்கொள்வதைப் பார்த்தேன். மொத்தக்கூட்டமும் பொதுவான முறைபப்டுத்தல்கள் இல்லாமல் தன்னிச்சையாக அங்காங்கே சிறு குழுக்களாகச் செயல்பட்டுக்கொண்டிருந்தார்கள்...

தேவர் சமாதி ஒரு கோயில் போல் இருக்கிறது. தேவர் துறவியாக இருந்தவராதலால் சைவ முறைப்படி சமாதியிடத்தில் ஆலயம்கட்டி வழிபட்டு வருகிறார்கள். நம்ப முடியாத அளவுக்கு கூட்டம். அலையலையாக . கைகூப்பியபடி கண்ணீர் கசிய பரவச நிலையில் வயதான பாட்டிகள் எல்லாம் வரிசையில் நின்றுகொண்டிருந்தார்கள். அந்த உணர்ச்சிவேகம் அங்கே எங்கும் நிறைந்திருந்தது. அந்த நீள்வரிசையை தாண்டி உள்ளே போக முடியும் என்றே படவில்லை....

கட்டுரையாளர் தேவரைப் பற்றி குறிப்பிடுகையில் தேவரின மக்கள் செய்யவேண்டியவன பற்றியும் கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறார்

எந்த ஒரு மக்கள்கூடுகையும் ஜனநாயகச் செயல்பாடுகளுக்குச் சாதகமானதே. தேவர்சாதியை அரசியல் பிரக்ஞைக்கு கொண்டுவந்தவர் என்ற முறையிலும் அவர்களின் ஒற்றுமைக்கும் உரிமைக்கும் சுயநலமில்லாது போராடியவர் என்ற முறையிலும் அம்மக்கள் முத்துராமலிங்கத்தேவர் மீது கொண்டிருக்கும் பெரும் பற்று மரியாதைக்குரியது

ஆனால் தேவர் அச்சாதிக்குள் தன்னை ஒடுக்கிக்கொண்ட ஒரு சாதித்தலைவராக இருக்கவில்லை. அவர் ஒரு தேசியத்தலைவர். ‘தேசியமும் தெய்வீகமும் என் இருகண்கள்என்று அறிவித்தவர். அந்தப்புரிதல் அங்கே வந்த மக்கள்திரளுக்கு இருக்கிறதா என்ற ஐயம் ஏற்பட்டது. அந்த திருவிழாவில் எங்குமே தேவர் அவர்களின் கருத்துக்களையும் அரசியல் பணியையும் வாழ்க்கை வரலாற்றையும் விளக்கும் ஒரு நிகழ்ச்சியோ , கண்காட்சியோ , ஏன் அறிவிப்புகளோகூட கண்ணில்படவில்லை. அவரைப்பற்றிய நூல்களோ அவர் ஆற்றிய உரைகளடங்கிய நூல்களோ விற்பனைக்கு வைத்திருக்கவில்லை. ஒரு தலைவரை அவரது கருத்துக்கள் வழியாக மக்கள் அறிவதே முறையானது. அதற்கான வசதிகள் அங்கே செய்யப்படவில்லை.

மதுரை ஆலயத்தில் தலித்துக்களை அழைத்துக்கொண்டு ஆலயப்பிரவேசம் செய்தவர் தேவர் என்பது வரலாறு. அந்த வரலாறு அந்த இளைஞர்களுக்குச் சொல்லிக்கொடுக்கப்பட்டிருக்கும் என்றால் அவர்களில் ஒருசிலர் கிளப்பிய சில வெறிகொண்ட வெறுப்புக்கோஷங்களை எழுப்பியிருக்கமாட்டார்கள்.

.சந்தானம், தி.செ.சௌ.ராஜன், சட்டநாதக் கரையாளர் போன்ற பலருடைய வாழ்க்கை வரலாறுகளில் தேவர் குறிப்பிடப்படுகிறார். உருக்கு போன்ற மன உறுதியும் கட்டுப்பாடும் கொண்ட மனிதராக அவரைச் சொல்கிறார்கள். அந்தக்கட்டுப்பாட்டை அவரது பிறந்தநாளில் கடைப்பிடித்தல்தான் அவருக்குப் பெருமை சேர்க்கும் என்று பட்டது. ஒரு தேசியத்தலைவரின் பிறந்தநாளன்று சாலைகள் தென்பட்ட பீதி ஒரு நல்ல விஷயம் அல்ல. தேவர் அவர் தேசத்துக்குச் செய்த தியாகங்களுக்காக அத்தனை சாதியினராலும் இந்தியாவில் உள்ள அத்தனை மக்களாலும் மதிப்புடனும், அவர் தங்களுக்கும் தலைவர் என்னும் பிரியத்துடனும் நினைவுகூரப்படுவதே அவருக்குச் செய்யும் நியாயம் ஆகும்.

தன்னிச்சையாக ஆரம்பித்த ஒரு விழா மெல்ல மெல்ல ஒரு திருவிழாவாக ஆகிவிட்டிருக்கிறது. உட்பிரிவுகள் ஊர்ப்பிரிவுகளை எல்லாம் மறந்து மக்கள் ஒருங்கிணைவது மிகச்சிறந்த ஒரு விஷயம்.சரியான வழிகாட்டல் இருந்தால் அம்மக்கள் தங்கள் ஜனநாயக உரிமைகளைப் பெறவும், கல்வி தொழில் போன்ற பல துறைகளில் ஒருங்கிணைந்து வெற்றி பெறவும் அந்த மனநிலை உதவக்கூடும். எந்த ஒரு மக்கள் எழுச்சியையும் சரியாக வழிநடத்தினால் ஆக்கபூர்வமான சக்தியாக ஆக்க முடியும். அதைச்செய்யும் தலைவர்கள் அவர்களில் இருந்து உருவாகி வரவேண்டும்

ஜெயமோகனின் முழு கட்டுரையையும் வாசிக்க இங்கே அழுத்தவும்

ஜெயமோகனின் கட்டுரை தொடர்பாக எழுந்த விவாதங்களை வாசிக்க இங்கே அழுத்தவும்

விவாதம்-2

விவாதம்-3 : தமிழக தேவரினம் -கேரள நாயரினம் ஒப்பீடும், தேவரின மக்களின் கடமையும்

.
.

No comments:

Post a Comment