அவர் இயக்குநராக அறிமுகமான 16 வயதினிலே படத்தில் கதாநாயகனை அதுவும் கமலஹாசனை சப்பாணியாக நடிக்க வைத்து, சினிமா ஹீரோ இப்படித்தான் இருக்க வேண்டும் என்று அதுவரை இருந்த சினிமா சம்பிரதாயத்தை உடைத்தெறிந்த முதல் இயக்குநரும் பாரதிதான்.
பாரதி, தனது முதல் படத்தின் மூலம் தமிழ்சினிமாவில் ஒரு புதிய நதியை ஓட வைத்திட அந்த நதியில் தான் இன்றுவரை எத்தனை இயக்குநர்கள் படகோட்டி வருகிறார்கள்!
கதாநாயகன் என்றால் ஆணழகனாக இருக்க வேண்டும், கட்டுமஸ்தான உடல்வாகு கொண்டவனாய் இருக்க வேண்டும் என்ற வறட்சியான தத்துவத்தையெல்லாம் போட்டு நொறுக்கிப் பொசுக்கியவர் இந்த பாரதி. அவர் இயக்கிய படங்களில் எல்லாம் அவரும் எதிர்பாராத புதுமுகங்களை படத்தின் முக்கிய கேரக்டர்களுக்கு அறிமுகப்படுத்தினார். பிறகு, அவரால் அறிமுகப்படுத்தப்பட்ட நடிகர் நடிகைகள் அனைவரும் தமிழ் சினிமாவில் உச்சகட்டப் புகழைப் பெற்று பிரபலமானார்கள்.
இந்திய சினிமாவிலேயே தனது திரைப்படங்களின் மூலம் கணக்கற்ற புதுமுகங்களை அறிமுகப்படுத்தி வெற்றி பெற்று சாதனை படைத்த ஒரே இயக்குநர் பாரதிராஜாதான் என்று நினைக்கிறேன். பாரதிராஜாவின் ஒரு படத்தில் நடித்தாலே போதும் தனது எதிர்காலம் ஒளிமயமாகி விடும் என்று ஏங்கி நிற்கும் கூட்டம் இன்றும் காத்துக் கொண்டு நிற்கிறது.
அவரது இன்னொரு மாபெரும் சாதனை, அவருடைய உதவியாளர்கள் அனைவரும் இன்று பிரபலமான இயக்குநர்களாக இருக்கிறார்கள். அடுத்த கட்டமாக அவர்களுடைய உதவியாளர்களும் இன்று இயக்குநர்கள், நடிகர்களாகி விட்டார்கள். உதாரணத்திற்கு பாரதிராஜாவின் உதவியாளர்களான பாகியராஜ், மணிவண்ணன் இருவருமே புகழ்பெற்ற இயக்குநர்களாகவும் நடிகர்களாகவும் இருக்கிறார்கள். பாக்யராஜ் அவர்களிடம் உதவியாளர்களாய் இருந்த பார்த்திபன் போன்றவர்கள் நடிகர்கள், இயக்குநர்களாகி விட்டார்கள்.
பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டு முன்னணி நடிகர், நடிகை களானவர்களை தமிழ்நாடே அறியுமென்பதால் அந்த நீ..ள..மான பட்டியலை இங்கே நான் எழுதவில்லை.
பாரதிராஜா படமென்றாலே, புதுமைகளுக்கு பஞ்சம் இருக்காது.. மண்வாசனைக்குத் தட்டுப்பாடு இருக்காது.. மனக்களிப்பிற்குத் தடையிருக்காது என்று மக்கள் ஒரு கல்வெட்டையே உருவாக்கிவிட்டார்கள்.
முதல்மரியாதை படத்தை நான் எத்தனை முறை பார்த்திருக்கிறேன், நடிகர் திலகத்தின் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரம் அதைக்கொண்டு பாரதி கதைப் போக்கு இன்றும் பிரமிக்க வைக்கிறது.
நான் கதை வசனகர்த்தாவாக இருந்தபோது, பாரதி உதவி இயக்குநராக இருந்தார். அப்போதிருந்தே நாங்கள் நண்பர்கள். ஆனால் 16 வயதினிலே வரும்வரை அந்த நண்பனிடம் இப்படியொரு அமானுஷ்யத் திறமை இருந்ததை நான் அறியவில்லை. இன்றும் அனது அருமை நண்பனாகத் திகழும் பாரதிராஜா, கர்வம் இல்லாத வெற்றியாளன். திரைஉலகில் என்றுமே களைத்துச் சளைக்காத ஒரு அபூர்வப் போராளி இந்த பாரதிராஜா!
எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடிய உண்மைக் கலைஞன். பாரதிராஜாவுக்குப் பின், தமிழ் சினிமாவில் இயக்குநராகும் ஆசையில் சென்னைக்கு ஓடிவந்தவர்கள் ஏராளம்.. இயக்குநர் ஆகும் ஆசையை இளைஞர்களிடத்தில் உண்டாக்கிய இயக்குநர் பாரதிராஜா!
பரதிராஜாவின் பாதிப்பால் பலரும் பல இடங்களில் இருந்து புறப்பட்டு வந்து இயக்குநர்கள் ஆனார்கள். அவர்களின் பெயரில் கட்டாயமாக பாரதி என்பதும் ராஜா என்பதும் இரண்டில் ஒன்று நிச்சயம் இடம் பெறும். அந்த அளவிற்குப் புதிய இயக்குநர்களை வசீகரித்தவர் பாரதிராஜா..
இன்றுவரை பாரதிராஜா என்ற அற்புதக்கலைஞன் மண்வாசனை கொண்ட படங்களைத் தருவதில் தனக்கு நிகர் யாரும் இல்லை என்று நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.
பாரதிராஜாவிற்கு தமிழ் சினிமாவும், தமிழர் கலாச்சாரமும், தமிழர்களின் பெருமையும் என்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறது.
-இயக்குநர் மகேந்திரன்
புத்தகம்: சினிமாவும் நானும்
தயாரிப்பு & வெளியீடு:
மித்ர ஆர்ட்ஸ் & கிரியேஷன்ஸ்
32/9 ஆற்காடு சாலை, கோடம்பாக்கம்
சென்னை-24
.
.