கற்கை நன்றே! கற்கை நன்றே! பிச்சை புகினும் கற்கை நன்றே!!

Monday 22 March, 2010

இருபது கட்டளைகள் (வைரமுத்து)

எங்கே ஊர்களில்
ஜாதி இல்லையோ
அங்கே கூவுக சேவல்களே

எங்கே பூமியில்
போர்கள் இல்லையோ
அங்கே பாடுக பூங்குயிலே
``````````````````````````````````````````````

எங்கே மனிதரில்
பேதமில்லையோ
அங்கே முழங்கு சங்கினமே

எங்கே மானுடம்
சிறகு தேடுமோ
அங்கே வழிவிடு வான்வெளியே
``````````````````````````````````````````````

எங்கே குழந்தையின்
கைகள் நீளுமோ
அங்கே ஒளிருக வெண்ணிலவே

எங்கே உனக்கு முன்
மனிதர் விழிப்பரோ
அங்கே தோன்றுக கதிரவனே
``````````````````````````````````````````````

எங்கே விதவையர்
கூந்தல் காயுமோ
அங்கே மலருக பூவினமே

எங்கே பூவினம்
தூங்கி விழிக்குமோ
அங்கே சுற்றுக வண்டினமே
``````````````````````````````````````````````

எங்கே புன்னகை
போலியில்லையோ
அங்கே சிரித்திடு பொன்னிதழே

எங்கே தன்னலம்
அழிந்து போகுமோ
அங்கே நீர்பொழி என்விழியே
``````````````````````````````````````````````

எங்கே வேர்வைகள்
தீர்ந்து போகுமோ
அங்கே மழை கொடு மாமுகிலே

எங்கே ஏழையர்
அடுப்பு தூங்குமோ
அங்கே பற்றுக தீச்சுடரே
``````````````````````````````````````````````

எங்கே கன்றுகள்
மிச்சம் வைக்குமோ
அங்கே சிந்துக கறவைகளே

எங்கே மனிதர்கள்
சைவமாவாரோ
அங்கே பாடுக பறவைகளே
``````````````````````````````````````````````

எங்கே உழைப்பவர்
உயரம் உயருமோ
அங்கே சுழலுக ஆலைகளே

எங்கே விதைத்தவர்
வயிறு குளிருமோ
அங்கே விளைந்திடு நெல்மணியே
``````````````````````````````````````````````

எங்கே கண்களில்
கள்ளமில்லையோ
அங்கே தோன்றுக கனவுகளே

எங்கே உறவுகள்
ஒழுக்கமாகுமோ
அங்கே வில்லெடு மன்மதனே
``````````````````````````````````````````````

எங்கே பயணம்
மீளக்கூடுமோ
அங்கே நீளுக சாலைகளே

எங்கே மண்குடம்
காத்திருக்குமோ
அங்கே பரவுக ஆறுகளே
*************************************************************

-கவிப்பேரரசு வைரமுத்து

புத்தகம்: வைரமுத்து கவிதைகள்
பக்க எண்: 594
.
.

No comments:

Post a Comment