அவரது மருத்துவமனையில் அமர்ந்து அவரிடம் நான் நிறைய உரையாடியதுண்டு. ஒருமுறை ஒரு லாரி ஓட்டுநர் வந்து குடியை நிறுத்தியபின்புள்ள வாழ்க்கையைப்பற்றி பேசிக்கொண்டிருந்துவிட்டுச் சென்றார். அவரது மனைவி மிக நெகிழ்ந்த நிலையில் டாக்டருக்கு நன்றி சொன்னாள். அவ்வாறு வந்துபேசுவது என்பது குடியை நிறுத்துவதில் மிக முக்கியமானது. அந்த உறுதிப்பாட்டை நீடிக்கச்செய்யும் ஒரு முயற்சி அது.
அவர் போனபின் டாக்டர் சொன்னார், ‘அவரைக் கவனித்தீர்களா , கையில் உயர்தர வாட்ச் அணிந்திருக்கிறார்.நல்ல சட்டை. மனைவி கழுத்தில் தங்கச்சங்கிலி. குடியை நிறுத்தி ஒருவருடம் ஆகவில்லை. பொருளாதார நிலை பலமடங்கு மேம்பட்டிருக்கிறது”. ”எப்படி?” என்றேன் ஆச்சரியமாக.
”குடிப்பவர்களின் குடும்பங்கள் மிகமிகக் குறைவான வருவாயில் வாழக்கற்றுக் கொண்டிருக்கின்றன…” என்றார் டாக்டர். தினம் முந்நூறு ரூபாய் சம்பாதிப்பவர் ஐம்பது ரூபாய்கூட குடும்பத்துக்குக் கொடுப்பதில்லை. அந்த சிறு தொகையில் அனைத்துத்தேவைகளையும் ஒடுக்கிக் கொண்டு அந்த குழந்தைகளை மனைவி வளர்க்கிறாள். சட்டென்று குடியை குடும்பத்தலைவர் விடும்போது கிட்டத்தட்ட முக்கால்பங்கு சம்பளம் மிச்சமாகிவிடுகிறது. சிலநாட்களிலேயே குடும்பம் மேலேறிவிடுகிறது.
'
'
குடி ஒரு பண்பாட்டு அம்சமோ ஒரு வாழ்க்கைமுறையோ கேளிக்கையோ ஒன்றுமல்ல, அது ஒருவகை நோய் மட்டுமே. நோயாக மட்டுமே அதைக் கண்டு அதற்கு சிகிழ்ச்சை அளித்து குணப்படுத்துவதே தேவையான செயலாகும். பெரும்பாலான குடிகாரர்கள் விளையாட்டாக நண்பர்களுடன் சேர்ந்து குடிக்க ஆரம்பிக்கிறார்கள். சட்டென்று உடல் அதற்குப் பழகிவிடுகிறது. அந்தப்பழக்கம் மெல்ல அடிமைப்படுத்துகிறது. அந்த பழக்கத்தை நியாயப்படுத்த ஆயிரம் காரணங்களைக் கண்டுபிடிக்கிறார்கள் மனிதர்கள். உடல்உளைச்சல் முதல் குடும்பப் பிரச்சினைகள் வரை. அந்த நியாயங்களுக்குள் சென்று விவாதிப்பதில் பொருளே இல்லை. நோயை குணப்படுத்துவதே தேவை
'
'
இந்தியா போன்ற வெப்பமண்டல நாட்டில் குடியின் பாதிப்பு மிகமிக அதிகம். பெரும்பாலும் வறுமைவாய்ப்பட்டவர்கள் வாழும் நம் நாட்டில் குடியினால் உழைப்பு குறைகிறது. உடல்நலம் குறைகிறது. விளைவாக குடும்பத்தில் பொருளியல் இழப்புகள் ஏற்படுகின்றன. இந்தியாவில் நூற்றுக்குத் தொண்ணூறு சதவீதம்பேர் மனைவிகுழந்தைகளை பட்டினி போட்டுத்தான் குடிக்கமுடியும்.
குடியை ஒரு நோயாக எண்ணமுடிந்தால் அதை சிகிழ்ச்சை செய்து குணப்படுத்துவது எளிது. ஆனால் சிகிழ்ச்சை பெறுபவர்களில் மீண்டும் குடிக்குத் திரும்பாமல் இருப்பவர்கள் கால்வாசிப் பேர்தான் என்றார் டாக்டர். ஏனென்றால் குடியை நாடுபவர்களில் பலர் குடிசார்ந்து ஓர் உலகை உருவாக்கி வைத்திருப்பார்கள். நெடுங்காலம் வேறு எதிலும் அவர்களுக்கு ஆர்வமே இருப்பதில்லை. சட்டென்று குடியை நிறுத்தும்போது ஒரு வெற்றிடம் உருவாகி வருகிறது. அந்த வெற்றிடத்தை அவர்கள் வேறுசெயல்பாடுகள் மூலம் நிரப்பிக்கொள்ளாவிட்டால் குடி அதை மீண்டும் கைப்பற்றும்.
'
'
நாகர்கோயில் கார்மல் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ‘நிழல் உலக நிதர்சனம்‘ என்ற பேரில் 2006 டிசம்பர் 7,8,9 தேதிகளில் ஜெயபதி அடிகள் முயற்சியால் நடத்தப்பட்ட கருத்தரங்கு இத்துறையில் ஒரு முக்கியமான முயற்சி. குடிகுறித்த பண்பாட்டுத்தகவல்களை தொகுப்பதற்கும் அதைப்பற்றிய ஓர் உரையாடலைத் தொடங்கி வைப்பதற்கும் இது முகாந்தரமாக அமைந்தது. அந்த அரங்கில் மூன்று நாட்களில் ஆறு அமர்வுகளிலாக 24 கட்டுரைகள் முன்வைக்கப்பட்டன. அவற்றை தொகுத்து ‘குடிபோதை:புனைவுகள் தெளிவுகள்‘ என்ற பேரில் ஒரு நூலாக ஆக்கியிருக்கிறார்கள் முனைவர் அ.கா.பெருமாள் மற்றும் சின்னச்சாமி.
இந்த நூல் குடிக்கு எதிரான ஒரு பிரச்சார நூல் அல்ல. குடிகுறித்த பலகோணங்களிலான ஒரு விவாதநூலே. இந்நூலில் உள்ள ‘குடியும் குடிசார்ந்த எண்ணங்களும்‘ என்ற நாஞ்சில்நாடனின் புகழ்பெற்ற கட்டுரை உண்மையில் அளவோடு குடிப்பது நல்லது என்றே வாதிடுகிறது. ‘நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று‘ என்று அது குடியை வர்ணிக்கிறது. குடி என்பது அறப்பிரச்சினை அல்ல, ஒழுக்கப்பிரச்சினை மட்டுமே. ஒழுக்கம் சார்புநிலைகொண்டது என்று வாதிடுகிறார் நாஞ்சில்நாடன்.
'
பிரான்ஸிஸ் ஜெயபதி அவர்களின் கட்டுரை மருத்துவ நோக்கில் குடி என்பது எப்படி ஒரு நோயாகவே கருதப்படுகிறது என்பதை மிக விரிவாக ஆராய்கிறது. கடற்கரைச் சமூகத்தில் 65 சதவீதம் ஆண்கள் குடிகாரர்கள் அவர்களில் 40 சதவீதம்பேர் குடியடிமைகள் என்று சொல்கிறார் ·பிரான்ஸிஸ் ஜெயபதி.
டார்டர் என்னும் ஆங்கில மருத்துவர் 1880ல் இரு பெரும் நூல்களை எழுதினார். நியூயார்க்கைச்சேர்ந்த டாக்டர் சில்க்வர்த் [William Duncan Silkworth]என்பவரும் குடி ஒரு நோய்தான் என்று வாதிட்டார். அவரால் குணமான பில் வில்சன் என்பவரே பின்னர் குடிக்கு எதிரான ஆல்ககாலிக் ஆனானிமஸ் என்னும் அமைப்பை உருவக்கினார்
குடி ஓர் அறப்பிரச்சினை அல்ல. ஒழுக்கக்கேள்வி அல்ல. புலனடக்கம் சார்ந்தது அல்ல. குடிகாரர் உண்மையில் ஒரு நோயாளி. அவருக்கு தேவை அறிவுரையோ புறக்கணிப்போ அல்ல. பிற நோய்களைப்போல அதற்கும் மருத்துவ உதவிதான் தேவை என்றார்கள் இவர்கள். மெல்ல மெல்ல அமெரிக்க மருத்துவக் கௌன்ஸில் இந்த வாதத்தை ஏற்றுக்கொண்டது. குடியை ஒரு நோயாக நிர்ணயம் செய்வதற்கான விதிகளை அது இரண்டாண்டுக்கால விவாதத்துக்குப் பின் உருவாக்கிக்கொண்டது.
'
பலவருடங்கள் கழித்துக்கூட குணமான குடிநோயாளி மீண்டும் திரும்பிவிடக்கூடும். ஆகவே தொடர்ச்சியான கண்காணிப்புடன் விரிவான பண்பாட்டு மாற்று அமைப்பும் அதற்கு தேவையாகிறது. மொத்தத்தில் குடியை நிறுத்துவது என்பது எளிய செயலல்ல என்று சொல்லும் பிரான்ஸிஸ் ஜெயபதி குடிக்கு எதிரான மனத்தடையை சமூகம் உருவாக்கி குடியை தொடங்காமல் இருக்கச்செய்வதே சிறந்த வழி என்கிறார்.
'
'
காந்திய சிந்தனையில் குடி குறித்த கருத்துக்கள் எப்படி உருவாயின என்பதை காந்தியவாதியான தே.வேலப்பனின் கட்டுரை விரிவாகச் சொல்கிறது. காந்தி குடிக்கு எதிரான தன் தீவிரமான கருத்துக்களை மதத்தின் ஒழுக்கவியலில் இருந்து பெற்றுக்கொண்டவரல்ல. அவர் ஓர் நடைமுறைவாதி. குடி எப்படி உடலையும் மனதையும் அடிமைப்படுத்துகிறது என்ற நேரடி அனுபவங்கள் மூலமே அவர் தன் எண்ணங்களை அடைந்தார்.
பாட்டர்சன் என்ற ஆஸ்திரேலியப் பொறியியலாளர் குடி அடிமையாக இருந்து காந்தியால் மீட்கபப்ட்டார். ஆனால் சிலவருடங்கள் கழித்து ‘;நான் மீண்டும் மதுவசமானேன்‘ என்று காந்திக்கு எழுதிவிட்டு மீண்டும் குடிகாரர் ஆனார். காந்திக்கு குடியின் வல்லமையைக் காட்டிய நிகழ்வு அது. குடியில் உள்ள பொருளியல் சுரண்டலை காந்தி நன்கறிந்திருந்தார். கள்ளுக்கடை ஆங்கில அரசின் மையமான சுரண்டல்களில் ஒன்று என்று உணர்ந்தபின்னரே அவர் அதற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்தார்
குடிபோதை:புனைவுகள் தெளிவுகள்‘ தொகுப்பாசிரியர்கள் அ.கா.பெருமாள், சின்னச்சாமி. தமிழினி வெளியீடு.